Saturday, September 24, 2011

என்னை நலம் விசாரித்து...

இதயச்
செடியிலிருந்து
மலரும்
வார்த்தைப் பூக்களின்
வாசத்தோடு
என்னை நம்பி
எத்தனை உறவுகள்?
* காதலியின்

கண்ணுக்கு
மையெழுதும் விரல்கள்!
* இதழ் ஒத்தடம்
சுமந்து வரும்
இனிய ஞாபகங்கள்!

* காதலை
கிறங்க வைக்கும்
தாவணி மனசுகள்!
* தாவணிக்கு
சாமரம் வீசும்
சந்தோஷ வார்த்தைகள்!

* அப்பாவிடம்
மகனும்...
மகனிடம்
அப்பாவும்...
பணம் கேட்டு அனுப்பும்
அவசர ஆணைகள்!

* மனைவி
சுமந்திருக்கும்
மசக்கையை...
மாமனாருக்கு தெரிவிக்கும்
உயிர்மெய்
எழுத்துக்கள்!
* டேபிள் துடைத்து
சாப்பாடு போடும்
மகனுக்கு...
அம்மாவின்
ஆசிகள்!

* புகுந்த வீட்டிலிருக்கும்
மகளுக்கு...
பிறந்த வீட்டிலிருந்து
போகும்
அப்பாவின்
ஆறுதல்கள்!
* விடுதியில் இருக்கும்
பிள்ளையின்
வீட்டு ஞாபகங்கள்!

* வாழ்க்கை
வரம் கேட்கும்
நம்பிக்கை மனுக்கள்!
* வட்டியோடு சேர்த்து
திருப்பாவிடில்
விற்கப்படும்
எச்சரிக்கை செய்யும்
ஆயுத எழுத்துக்கள்!

* எல்லை
இறுதியில்
இந்திய
மண்ணை காக்கும்
மாவீரர்களுக்கு...
மனைவிகளின்
உஷ்ணமூட்டும்
காதல் வரிகள்!
* அயல்
தேசத்திலிருக்கும்
அன்பான
கணவனுக்கு
அனுப்பப்படும்
ஆயிரம் முத்தங்கள்!

* மடித்து
வைக்கப்பட்டிருக்கும்
ஆண்டவனின்
அருட் பிரசாதங்கள்!
* இன்னும்...
இன்னும்...
* மழையிலும்...
வெயிலிலும்...
பனியிலும்...
பாதுகாப்பாக...

* ஓராயிரம்
உள்ளங்களை
சுமந்து நின்று
அனுப்பி வைக்கும் என்னை...
* யாராவது
நலம் விசாரித்து
ஒரு கடிதம் எழுதக் கூடாதா?
* தபால் பெட்டி
கேட்கிறது!

No comments:

Post a Comment